மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி 100 வட்டாரங்களில் தனித்து வெற்றிபெறும் - இரா.சாணக்கியன்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
தமிழர் பகுதிகளிலும் பல அரசியல் கட்சிகள் நேற்று மதியம் 12 மணிவரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தபின்னர், தமிழரசுக்கட்சியின் வெற்றி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சாணக்கியன் நம்பிக்கை
ஆதரவாளர்களுக்கு கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறையும் தமிழரசுக்கட்சி அதிக வட்டாரங்களில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டிருந்ததுடன், ஆட்சியமைப்பதில் பல சிக்கல்களையும் எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினர்.
100 வட்டாரங்களில் வெற்றிபெறும்
இதேவேளை, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து 76 வட்டாரங்களில் வெற்றி பெற்றிருந்தோம், இம்முறை தமிழரசுக்கட்சி 100 வட்டாரங்களில் தனித்து வெற்றிபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சி வெற்றிபெறவும், தனித்து ஆட்சியமைக்கவும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

