துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவள அதிகாரி: சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
வவுனியா (Vavuniya) - பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“ வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
திசைக்காட்டி அரசாங்கம்
இது ஒரு எல்லைப்புற மாவட்டம். எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த செயற்திட்டம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
தற்போது இந்த ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாட்டின் பொருளாதார பிரச்சினையே. கடந்தகால ஆட்சியாளர்கள் விட்ட தவறே ஜே.வி.பி என்ற என்.பி.பி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தது.

இலங்கை மக்கள் என்ற வகையில் பார்த்தால் ஊழல் இல்லாத ஒருஆட்சி, மக்களுடைய சொத்தை கொள்ளைஅடிக்காத அரசாங்கமும், ஆட்சியாளர்களும் இருக்க வேண்டியது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை.
ஆனால் தமிழ்மக்களை பொறுத்தவரை இதைவிட மேலதிகமாக இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டம்
இந்த அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்குரிய முதற்படிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நாங்கள் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஆதரவு அளிக்கலாம்.
ஆனால் எமது அரசியல் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடிவுநோக்கிய பயணத்தில் மாற்றமில்லாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

தற்போதைய அரசுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை நீக்காமல் இப்போதும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
அதேபோல அண்மையில் வவுனியாவில் மக்களின் சொந்தகாணிகளுக்குள் வனவளத்திணைக்களம் எல்லை போடுகின்றமை தொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கி மிரட்டல்
நான் அங்கு சென்றமையால் அதனை தடுக்கமுடிந்தது. ஏன் அரசாங்கத்தால் இதனை செய்யமுடியாது.
இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தமது சொந்த காணிகளுக்குள் செல்வதை இந்த திணைக்களம் எதற்காக தடுக்கிறது.

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள மக்கள் இது தங்களுக்குரிய காணி என்று தெரிவித்த போது அங்கு நின்ற வனவளத்திணைக்கள அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார்.நான் அவர்களை எச்சரித்திருந்தேன்.
இதன் மூலம் அடக்கு முறை அரசியலை செய்வதற்கு அரசாங்கம் மாறினாலும் அரச நிர்வாகம் மாறவில்லை என்பது புலப்படுகிறது. அதனை மாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        