வீடுகள் இல்லை - இன்று காடு மட்டும்! 21 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சவூதி உதவி கிராமம்
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாததன் மர்மம் குறித்து பல்வேறு தரப்பினராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இவ்வீடமைப்புத்திட்டம் சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டபோதிலும் நாளையுடன் (26) 21 வருடங்களாக மக்களுக்கு கையளிக்கப்படாமல் இன்று காடு மண்டிக் காணப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தின் 552 மில்லியன் ரூபா நிதியுதவியில் சுனாமி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
500 வீடுகள்
இவ்வீட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டது.

சுமார் 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள் உட்பட பல்தேவை கட்டிடம், சந்தைக் கட்டிடம், ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலை, பள்ளிவாயல், வைத்தியசாலை, பஸ்தரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பேரியல் அஷ்ரப் பதவி வகித்தார்.
சுமார் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் 500 வீடுகள் உள்ளன.
இவ்வீட்டுத்திட்டமானது இது வரை மக்களுக்கு கையளிக்கப்படாததன் காரணம் நீதி மன்றத் தீர்ப்பு மற்றும் அரசியல் காரணங்கள் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
புற்களாலும் சூழப்பட்ட காடு
கடந்தகால ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வீடுகளை கையளிக்காமல் மரங்களாலும் புற்களாலும் சூழப்பட்ட காடு மண்டி வனமாக தற்போது காட்சி அளிக்கின்றது.

தற்போது இம்மீள்குடியேற்ற கிராமம் காடுகளால் சூழப்பட்டு, கொடிய விச ஜந்துக்கள், யானை மற்றும் ஆபத்தான விலங்குகள், பிராணிகளின் உறைவிடமாக மாறியுள்ளதுடன் வீடுகள் யாவும் சேதமாகியுள்ளது.
தற்போது இவ்வீடுகளை பகிர்ந்தளித்தாலும் கூட பயனாளிகளால் உடனடியாக குடியேறமுடியாத நிலையில் மிகவும் மோசமாக சேதமடைந்த நிலையிலேயே வீடுகள் காடுமண்டிய நிலையில் காணப்படுகின்றன.
டிக்வா புயல் அனர்த்தம் காரணமாக பல மக்கள் வீடுகளை இழந்திருக்கின்றார்கள்.
எனவே இவ்வாறு இயற்கை அனர்த்தங்களினால் தங்களது வீடுகளை இழந்தவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.இதனை எல்லோரும் சாதி மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும்.
அரசியல் வேறுபாடுகள் இதர காரணங்களினால் இவ்வாறான பெறுமதியான வீடுகள் உரிய காலத்தில் மக்களிற்கு கையளிக்காததன் காரணமாக பெறுமதி இழந்து வருவதுடன் பல மடங்கு செலவுகளையும் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும் போது ஏற்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













