வடக்கு மாகாண முதலாம் தர மாணவர்களுக்கான பாடசாலை கண் சுகாதாரத் திட்டம்
வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் பாடசாலை கண் சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 14,997 மாணவர்களுக்குக் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2026 ஜூலை 21ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 13 கல்வி வலயங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, வட மாகாணத்தின் முதலாம் தர மாணவர்களில் 92.6 வீதமானோர் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், 1,199 மாணவர்கள் இப்பரிசோதனையில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வைக் குறைபாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு ஆலோசனைக் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் எம். மலரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், கண் பிரிவு ஒளியளவியலாளர்களும் பங்கேற்றனர்.

பரிசோதனைக்கு வருகைதந்த ஒவ்வொரு மாணவரும் வைத்தியர் மலரவனால் நேரடியாகப் பரிசோதிக்கப்பட்டனர். கண் பரிசோதனைகளின் மூலம் 1,455 மாணவர்களுக்கு (9.7 வீதம்) பார்வைக் குவியப் பிரச்சினைகள் (Refractive Errors) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, சுமார் 10 மாணவர்களில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பார்வைக் குவியப் பிரச்சினைகளைத் தவிர்ந்த ஏனைய கண் நோய்கள் மற்றும் குறைபாடுகளும் மாணவர்களிடையே கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் மூக்குக்கண்ணாடி தேவைப்பாட்டை அடையாளம் காண்பதுடன் மட்டுப்படுத்தப்படாமல், முழுமையான கண் சுகாதாரப் பரிசோதனைகளாக அமைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்ட 1,455 மாணவர்களில் 129 பேர் (8.9 வீதம்) மட்டுமே ஏற்கனவே மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தனர். ஏனைய 1,326 மாணவர்கள் (91.1 வீதம்) மூக்குக்கண்ணாடி அணியாதவர்களாகக் காணப்பட்டனர்.
கண் பரிசோதனை
மூக்குக்கண்ணாடிகளின் அதிக விலை, மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான போக்குவரத்துச் சிரமங்கள், நீண்ட தூரப் பயணம் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்கள் போன்ற காரணிகள் மாணவர்கள் உரிய நேரத்தில் பார்வைத் திருத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான மூக்குக்கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கும், மேலதிக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கண் பரிசோதனையில் கலந்துகொள்ளாத 1,199 மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலையையோ அருகிலுள்ள கண் மருத்துவ நிலையத்தையோ தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மூக்குக்கண்ணாடி அணியுமாறு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைப் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதுடன், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |