இங்கிலாந்தில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் வீடியோவுடன் சிக்கிய சிறுமி! திடுக்கிடும் செய்தி
இங்கிலாந்தின் கிழக்கு மிட்லாண்ட்ஸில் உள்ள டெர்பிஷைர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வெடிகுண்டுகளை தயாரிப்பது தொடர்பான காணொளி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் மீது ஆறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி, 3D அச்சிடும் இயந்திரத்தை (printer) பயன்படுத்தி துப்பாக்கியை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி அறிந்துகொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிறுமி மறுத்தார்.
மேலும் குறித்த சிறுமி, ஆகஸ்ட் 24 அன்று நாட்டிங்ஹாம் இளைஞர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
பயங்கரவாதச் செயலைச் செய்த அல்லது தயாரிக்கும் நபருக்கு பயனுள்ளதாக இருக்கும் தகவல்களை வைத்திருப்பது உள்ளட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் இவர் எதிர்கொண்டார்.
வெடிகுண்டு தயாரிக்கும் வீடியோவுடன், வீட்டுப் பொருட்களிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை வழங்கிய டிஜிட்டல் ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.