கெஹெல்பத்தர விவகாரத்தில் தொடர்பு! பிரதி காவல்துறை மா அதிபர் சி.ஐ.டியில் வாக்குமூலம்
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அவரிடம் பல மணி நேரம் விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நியாயமான காரணங்களின்றி தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, வருண ஜயசுந்தரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அண்மையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |