ஐ.நா ஆணையாளருக்கு அரியநேத்திரன் எழுதிய அவசர கடிதம்!
2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமான முன்னுரிமை வாக்குகளை பெற்ற தமிழ் பொதுவேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாக்கிசெல்வம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதமானது, இன்று(08) அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இலங்கையில் நடந்த சர்வதேச அளவிலான குற்றச்செயல்கள் குறித்து உண்மையான பொறுப்பேற்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதையும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்கு முக்கிய கேள்விகள்
மேலும், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு–கிழக்கு பகுதிகளில் நடந்த படுகொலைகளையும், அவை அனைத்தும் இன அழிப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே நடைபெற்றதாகவும் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான படுகொலைகள் 2002 ஜூலை 1ற்கு முன்பு நடந்ததால் ரோம் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வர முடியவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில், அரியநேதிரன் தனது கடிதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நான்கு முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார்:
- இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட நபர்களும் சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கு உட்பட முடியுமா?
- புதிய தீர்மானம் இல்லாமல், இந்த விவகாரம் ஐ.நா. பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் போன்ற உயர்மட்ட அமைப்புகளுக்கு கொண்டு செல்ல முடியுமா?
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா? முடியாவிட்டால் மாற்று வழிகள் என்ன?
- இலங்கை தொடர்பான தற்போதைய அமைப்பின் (OSLAP) அதிகாரத்தை, சிரியாவுக்கான IIIM போன்று சுயாதீன சர்வதேச விசாரணை அமைப்பாக விரிவாக்க முடியுமா?
தன்னை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த வாக்குகள், இந்த கோரிக்கைகளை வைக்கும் நெறிமுறை மற்றும் ஜனநாயக உரிமையை அளிக்கின்றன என்றும், தமிழர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஐ.நா சபை உரிய முக்கியத்துவம் தரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 17 மணி நேரம் முன்
