காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் வீட்டிற்கு கழிவொயில் வீச்சு - யாழ் பல்கலை கண்டனம்
வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜெனிற்றாவின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இடம்பெற்ற கழிவொயில் வீச்சிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேரில் சென்று ஆராய்ந்த நிலையில் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், கடந்த 15ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் தினத்தினை யாழில் முன்னெடுத்த வேளை முன்னின்று வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜனநாயகரீதியில் போராட்டத்தினை முன்னடுத்திருந்தார்.
இதன் மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.
வன்முறைகள் தடுக்கபடவேண்டும்
ஆகவே தொடர்ச்சியாக காணமலாக்கப்பட்டோரின் நீதிவேண்டி போராடுகின்றவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கபடவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
மேலும் கழிவொயில் வீச்சு தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை
அண்மையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டதன் காரணமாக அதற்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளரை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு காவல்துறையினரால் அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் ஆணைக்குழவில் முறைப்பாடு
இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழவிலும் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.