காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: டிரான் அலஸ்
காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் அவரவர் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் சுதர்ஷன பெனிபிட்டிய முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பாதாள குழுவின் செயற்பாடுகளையும், போதைப்பொருள் வியாபாரத்தையும் இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வழங்க முடியாது
சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது. இருப்பினும் பாதாள குழுவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பெறுபேற்றை வெகுவிரைவில் அறிந்துக் கொள்ள முடியும்.
சிறைச்சாலைகளில் உள்ள நிலையில் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுக்கும் தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நீதியமைச்சருடன் கலந்துரையாடியுள்ளோம்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். சகல காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. சீறுடை அணிந்துள்ள காவல்துறையினர் தங்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காவல்துறை சேவைக்கு வரும் போது அவர்களுக்கு அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே காவல்துறையினருக்கு என்று பாதுகாப்பு வழங்க விசேட செயற்திட்டம் ஏதும் வகுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.