இந்தியாவில் பரபரப்பு: விமான நிலையங்களில் முடுக்கிவிடப்படும் பாதுகாப்பு!
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 2 வரை தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதக் குழுக்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய புலனாய்வுத் தரவுகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கையின் பின்னணியில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்பு பிரிவு (BCAS) ஆகஸ்ட் திகதி ஆம் தேதி, உடனடி நடவடிக்கைகள் எடுக்கக் கூறி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
24 மணி நேர கண்காணிப்பு
அதன்படி, விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், ஹெலிபேட்கள், விமான பயிற்சி மையங்கள் என அனைத்து விமான தளங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும் 24 மணி நேர கண்காணிப்புடன் செயற்படவுள்ளன.
அதனுடன், பணியாளர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் அடையாளச் சான்றுகள் கட்டாயமாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலைய வளாகம் முழுவதும் சிசிரிவி கண்காணிப்பு தொடர்ச்சியாக செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தி, அனுமதியில்லாத நபர்களின் நுழைவை உடனடியாக தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
தீவிர சோதனைகள்
அத்தோடு, உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கான சரக்கு மற்றும் அஞ்சல் பொருட்கள் மீது தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமான நிலைய பணிப்பாளர்கள், அனைத்து சார்ந்த நிறுவனங்களும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதை உறுதிசெய்ய விமான பயணிகள் சேவை குழுக்களுடன் விசேட கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிராந்திய BCAS பணிப்பாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உடனடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நடவடிக்கைகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
