நாம் தமிழர் கட்சியை குறிவைக்கும் இந்திய அரசு! தீவிரமடையும் சோதனைகள்
இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளுடன் தமிழகத்தில் உள்ள சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குறித்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரமடையும் சோதனைகள்
இன்று அதிகாலை முதல் தலைநகர் சென்னை தொடங்கி தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, சிவகங்கை, தென்காசி உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அந்த கட்சியுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சி
தென்காசி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வீட்டிலும், திருச்சியில் குறித்த கட்சியின் நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்களின் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |