அத்துமீறி பாலியல் வன்புணர்வுக்கு முயன்றவருக்கு நேர்ந்த விபரீதம்
கந்தேகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் பலவந்தமாக நுழைந்து பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட நபரொருவரின் விரல் ஒன்றை கடித்து எறிந்துள்ளார் அந்த பெண்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் காயமடைந்த நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாகவும் ஆனால் காயமடைந்த விரலுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண் வீட்டில் தனியாக இருந்த போது, அத்துமீறி நுழைந்த நபர்
குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது, அத்துமீறி நுழைந்த நபர் தன்னை ஒரு பெட்ஷீட்டில் சுற்றிக் கொண்டு, அடையாளம் தெரியாத வகையில் சென்றுள்ளார். இருப்பினும், அந்த நபர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது, குறித்த பெண் அவருடைய ஒரு விரலைக் கடித்ததால் அவர் கடுமையான வலியுடன் ஓடினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை
பெண் உடனடியாக 119க்கு அழைப்பு விடுத்து விசாரணைகளை ஆரம்பித்ததன் பேரில் தங்கெட்டிய காவல்நிலையத்தின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. எனினும் சந்தேக நபரை அடையாளம் காண முடியவில்லை என பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை கைது செய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

