பிரான்ஸில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு! பயங்கரவாதத் தாக்குதலாக விசாரணை
பிரான்ஸின் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தைப் பயங்கரவாதச் சம்பவமாகக் கருதி அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை பாரிஸின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Trappes நகரிலும், அதனை அண்டிய La Verriere பகுதியிலும் வாகனத்தில் வந்த நபர் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர் கைது
காயமடைந்தவர்களில் 12 வயதுச் சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பிரான்ஸின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் (PNAT) பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய கொலைச் சம்பவமாக இது இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தனது வாகனத்தில் பயணித்தவாறு எதிர்ப்பட்ட பலரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் பல குடியிருப்புப் பகுதிகளில் நோக்கமின்றிச் சுற்றித்திரிந்து, அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |