யாழில் உணவு தயாரிப்பு நிலைய உரிமையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை
யாழில், பருப்பு வடைக்குள் பாத்திரம் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பிச் சுருள் காணப்பட்ட சம்பவம் தொடர்பில், உணவு தயாரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் உணவு வழங்கும் நிலையம் ஒன்றில், கம்பித் துண்டுகள் கலந்த பருப்பு வடை நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ப. தினேஷ் விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த உணவு நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
விதிக்கப்பட்ட அபராதம்
குறித்த வழக்கு கடந்த 13.11.2026 அன்று நீதவான் இந்துஜா சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட உரிமையாளருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
எனினும், அத்தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட தண்டனைக் காலத்திற்குள் மீண்டும் இவ்வாறான குற்றம் இடம்பெறுவது கண்டறியப்பட்டால், உரிமையாளர் ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |