வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கொழும்பில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள பல ஆடம்பரக் குடியிருப்பு வளாகங்களுக்கு மத்திய குழாய் கட்டமைப்பின் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையில், தற்போதைய தட்டுப்பாடு காரணமாக அந்த விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என ஆங்கில ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள முன்னணி ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றின் நிர்வாகம், எரிவாயுவை அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள்
குறித்த குடியிருப்பு வளாகத்தில் வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வளாகத்தில் தற்போது எஞ்சியுள்ள இறுதி எரிவாயு இருப்பு பயன்படுத்தப்பட்டு வருவதால், எரிவாயுவைச் சேமிக்கும் நோக்கில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாரஹேன்பிட்டியிலுள்ள மற்றுமொரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திலும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு இந்த மாதத்திற்குத் தேவையான எரிவாயு இருப்பு மாத்திரமே உள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்கான இருப்பு இல்லையெனவும் கூறப்படுகிறது.
சில குடியிருப்பு வளாகங்கள் வீடுகளுக்கான விநியோகச் சேவைகள் ஊடாக எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொண்டு வந்த நிலையில், அந்தச் சேவைகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த நவம்பர் 04ஆம் திகதி எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எரிவாயு விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை
எரிவாயு விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை நவம்பர் மாதத்தில் எரிவாயுவை ஏற்றிய மூன்று கப்பல்களைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக LAUGFS Gas PLC நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை முனையத்தின் ஊடாக உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டு கப்பல்கள் நவம்பர் 12 முதல் 14ஆம் திகதி வரையிலும், நவம்பர் 24 முதல் 28ஆம் திகதி வரையிலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளன. மற்றுமொரு கப்பல் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டின் எரிவாயு விநியோகத்தைத் தொடர்ந்து பேணும் நோக்கில், அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விநியோகத்திற்காக ஹம்பாந்தோட்டை முனையத்தைப் பயன்படுத்துவதற்கான தற்காலிக அனுமதியைக் கோரி LAUGFS Terminals Ltd. விண்ணப்பித்துள்ளது.
அத்துடன், 2027 ஜனவரி மாதம் முதல் கொழும்பு துறைமுகத்திற்கு நேரடியாக எரிவாயுவைக் கொண்டுவருவதற்கான புதிய ஒப்பந்தக் கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக LAUGFS Gas நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |