மருந்து தட்டுப்பாட்டுக்கு அடுத்த சில நாட்களில் தீர்வு - சன்ன ஜயசுமன
இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கடன் உதவியுடன் மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இலங்கையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் துரித அன்டிஜன் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் 4 லட்சம் அன்டிஜன் கருவிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெறும். தேவையான அன்டிஜன் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, 80 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.
எனினும் சில மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அடுத்த சில நாட்களுக்கு நிலைமை வழமைக்கு திரும்பும் என தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களைப் இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
