தாய்லாந்தின் புதிய பிரதமராகச் சொத்து முதலீட்டாளரான ஸ்ரேத்தா தவிசின்
தாய்லாந்தின் புதிய பிரதமராகச் சொத்து முதலீட்டாளரான ஸ்ரேத்தா தவிசினுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
தாய்லாந்தில் 2006ஆம் ஆண்டு நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் பதவிநீக்கம் செய்யப்பட்ட தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்(74) கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குத் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார்.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில்
இந்நிலையில் தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்ற அதே தினத்தன்று தாயகம் திரும்பினார் இவர். மே மாதம் நடந்த தேர்தலில் திரு ஸ்ரேத்தாவின் பியூ தாய் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.
எனினும் செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் திரு ஸ்ரேத்தா பெரும்பான்மை வாக்குகளை உறுதிசெய்து நாட்டின் 30வது பிரதமர் ஆனார்.
நேரடியாக ஒளிபரப்பான வாக்கு எண்ணிக்கையின்படி ஸ்ரேத்தாவுக்கு ஆதரவாக 482 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். அவருக்கு எதிராக 165 பேர் வாக்களித்தனர் என்றும் வாக்களிப்பில் 81 பேர் கலந்துகொள்ளவில்லை என்றும் அறியப்படுகிறது.
பல கட்சிகளை உள்ளடக்கிய பியூ தாயின் கூட்டணிக் கட்சி கீழவையின் 500 இடங்களில் 314 இடங்களைப் பிடித்துள்ளது.
ஏழ்மை, சரிசமமின்மை இரண்டையும் கையாள ஸ்ரேத்தா உறுதி பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.