பிரித்தானியாவில் இரு சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை
பிரித்தானியாவில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடாத்திவந்த இரண்டு சகோதரிகள் அதனுடன் சேர்த்து பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரத்தையும் முன்னெடுத்துச் சென்றமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரிகள் இருவரும் சலூன் கடைகளை நடத்தி வந்ததால், போதை மருந்து தொழில் தொடர்பில் சந்தேகம் எழவில்லை. இரு சகோதரிகளும் கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயர் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.
சலூன் கடை மறைவில் போதை மருந்து தொழிலில் ஈடுபட்ட சகோதரிகள் இருவரும் 300,000 பவுண்டுகள் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் 44 வயதான ஷாஜியா தின் மற்றும் அவரது மூத்த சகோதரி 47 வயதான அபியா தின் ஆகிய இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு குழுவை முன்னெடுத்து நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் 2020 டிசம்பர் மாதம் இந்த இரு சகோதரிகள் தொடர்பில் மொத்தம் 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சகோதரிகள் இருவருக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை மேற்கொண்ட கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் மொத்தம் 60 கிலோ ஹெரோயின் மற்றும் கொக்கெய்ன் போதை மருந்தும் 300,000 பவுண்டுகள் தொகையையும் மீட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஷாஜியா தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது சகோதரிக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரு சகோதரிகளும் தொடர்புடைய 17 பேர்கொண்ட குழுவினரிடம் இருந்து மொத்தமாக 736,464.30 பவுண்டுகள் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

