சிவாஜிலிங்கம் ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது - யாழ் வாழ் முஸ்லிம்கள் இரங்கல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஐயா அவர்களின் மறைவு குறித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் ஆழ்ந்த கவலையடைவதுடன், அன்னாரின் இழப்பிற்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜிலிங்கம் ஐயா தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டோடு, தமிழ் மக்களின் விடுதலைக்காக துடிப்புடன் களத்தில் நின்று போராடுபவராகவும், சிறந்தவொரு தமிழ்த் தேசியப் பற்றுக் கொண்டவராகவும் இறுவரை வாழ்ந்தவர்.
அன்னாரின் இழப்பு தமிழ்த்தேசியத்திற்கும், தமிழ் மக்கள் மத்தியிலும் என்றும் ஈடு செய்யப்பட முடியாத ஒன்றாகும்.
துணிந்து தைரியமாக எதிர்க்கும் தன்மை
அவரது இழப்பின் மூலம் ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசியத்தின் இடைவெளியை எவராலும் நிரப்ப முடியாது என்பதை சகலரும் அறிவர்.
மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களில் மக்களோடு, மக்களாக இணைந்து போராடும் குணமும், மக்களுக்கு அநீதி இடம்பெறும் போது போராட்டக் களங்களில் நின்று துணிந்து தைரியமாக எதிர்க்கும் தன்மையும் அவரிடம் மாத்திரமே நாம் காண முடியும்.

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுக்கும் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களுக்;கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று உருவானதல்ல. 1990 களுக்கு முன்பிருந்தே யாழ்ப்பாணம் முஸ்லிம்களுடன் மிக நெருக்கமாக பழகிய விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ்த் தேசியத் தலைவர்களுக்குள் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களும் முக்கியமானவர்.
தமிழ் - முஸ்லிம் மக்களிற்கிடையில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் தமிழ்த் தலைவர்களுள் இவர் மிக முக்கியமான ஒரு தமிழ்த்தலைவராக வாழ்ந்து காட்டியவர். அதற்கு பல்வேறு சான்றுகளையும் கூற முடியும்.
முஸ்லிம் மக்களும் இரங்கல்
கடந்த முதலாவது மாகாண சபைக் காலத்தில் அவர் அங்கத்துவம் வகிக்கும் போது புத்தளத்தில் எமது முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட அறுவைக்காலு குப்பை சேகரிப்பு நிலையத்தை இரத்துச் செய்யக் கோரிய போராட்டத்திலும் வடக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதியாக புத்தளம் வாழ் முஸ்லிம்களுக்காக நேரடியாக போராட்டக் களத்திற்கு சென்றதுடன், போராட்டத்தில் இணைந்து அவர்களின் உரிமைசார் போராட்டத்திற்கு வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஆதரவையும் தைரியமாக வெளிப்படுத்திய தமிழ்த் தலைவர்.

அன்னாரது இழப்பானது யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த துயரையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, உறவினர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் அனைவருக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |