கோட்டாபய வெளியேறும் வரை அங்கேயே தங்கியிருப்போம்! அதிரடி காணும் போராட்டக்களம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை அரச தலைவர் மாளிகையை நாளை சுற்றி வளைத்து அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது கோட்டை தொடர்ந்து நிலையத்தில் ஆரம்பமாகி பின்னர் அரச தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்லவுள்ளது.
இறுதிப் போரில் இணையுமாறு அழைப்பு
இந்நிலையில், அரச தலைவர் பதவி விலகும் வரை அரச தலைவர் மாளிகையிலேயே தங்கி இருப்போம் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் இணையுமாறு அனைத்து மக்களையும் நாங்கள் அழைக்கிறோம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படையினருக்கும் அழைப்பு
உயர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் போராட்டத்தில் பங்கேற்குமாறும் பாதுகாப்புப் படையினரையும் காவல்துறையினரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் மத்தும பண்டார கூறினார்.
மக்கள் இன்று தலைநகருக்கு வருவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
