காவல்துறை மா அதிபர் விவகாரம் : அரசின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்
சிறிலங்கா அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) தெரிவித்துள்ளது.
காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) நியமிக்கப்பட்டமை தொடர்பில், உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இரத்து செய்ய பிரதமருக்கோ, சபாநாயகருக்கோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினருக்கோ அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர்
அத்துடன் அரசியலமைப்பு பேரவையின் முடிவுகள் உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பிற்குள் தெளிவாக இணங்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுத்து கடந்த 24ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
பிரதமர் தெரிவித்த கருத்து
இதனையடுத்து கடந்த 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena), காவல்துறைமா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கிய அனுமதியை நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என தெரிவித்தார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது எனவும், காவல்துறைமா அதிபரின் நியமனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |