உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பலியானோர் புனிதர்கள்!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களை புனிதர்களாக அறிவிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென அவர் கூறியுள்ளார்.
கந்தானையில் உள்ள புனித செயஸ்தியார் ஆலயத்தில், இன்று (21) நடைபெற்ற திருப்பலியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று, கிறிஸ்துவை விசுவாசிக்கும் தரப்பினர் ஆலயத்துக்கு வந்திருந்ததாகவும், ஏனைய புனிதர்களை போல் உயிரிழந்தவர்கள் தங்களை உயிரை கடவுளுக்காக தியாகம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவர் தனது உயிரை தியாகம் செய்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் புனிதராக அறிவிக்கப்படுவார் எனவும், இதற்கமைய, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களும் புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் புனிதர்கள்
இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவம் என்பது சமய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் ஒன்று அல்ல எனவும், நீதிக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |