'இலங்கையின்' எதிர்காலம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ரணில்
நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பேன்
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்கும் தனது செயற்பாடுகளுக்கு புனித தந்ததாது மற்றும் அனைத்து கடவுளர்களின் ஆசிர்வாதம் பெரும்பலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹர விழா மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த பெரஹர விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு கண்டி அதிபர் மாளிகையில் நேற்று விசேட நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அதிபர், அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதைவிட சவால்கள் மிக்க காலம் இலங்கைக்கு வரலாம்
பெரஹர விழா இலங்கையின் கடினமான காலப்பகுதியில் நடைபெறுவதாகவும் நெருக்கடியான காலத்தை தற்போதே முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதைவிட சவால்கள் மிக்க காலம் இலங்கைக்கு வரலாம் எனக் கூறிய அவர், எல்லா சவால்களிலிருந்தும் மீள புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.
இதேவேளை, அதிபர் மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உட்பட நான்கு மகா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் நிலமே மார் அதிபர் மாளிகையின் பிரதான நுழைவாயிலில் வைத்து அதிபரால் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பெரஹராவில் சென்ற யானைகளை அடையாளப்படுத்தும் வகையில், “ சிந்து ” எனும் யானைக்கு, அதிபரால் பழங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

