வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையிலான யுத்தம் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பணித்துள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நஹாரியா, அக்கோ, ஹைஃபா, திபெரியாஸ் மற்றும் நசரேத் நகரங்கள் தற்போது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
பாரிய மனிதாபிமான விளைவுகள்
அந்தவகையில், மேற்குறிப்பிட்ட வடக்கு நகரங்களில் உள்ள இலங்கையர்கள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இஸ்ரேலிய அரசாங்கம் இந்த பகுதிகளில் துருப்புக்களை அனுப்பியுள்ளது மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் இராணுவம் காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி 24 மணி நேரத்திற்குள் இடம்பெயரவேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் அத்தகைய உத்தரவை உறுதிப்படுத்தாத போதிலும், இது வரவிருக்கும் தரைவழித் தாக்குதலைக் குறிப்பதாக அமையப்பெற்றுள்ளது.
இஸ்ரேல், வியாழன் அன்று, தரைவழித் தாக்குதலுக்குத் தயாரான போதும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை, பாரிய மனிதாபிமான விளைவுகள் இன்றி இந்த இடப்பெயர்வு இடம்பெற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.