தெற்காசியாவில் உயர்வான மனித மேம்பாட்டுத் தரத்தைப் பேணும் நாடாக இலங்கை
தெற்காசிய பிராந்தியத்தில் மனித மேம்பாட்டுத் தராதரத்தில் 'உயர்வான' மட்டத்தைப் பேணும் நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அண்மைக் காலங்களில் தெற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் மனித மேம்பாட்டை முன்னிலைப்படுத்திய இலங்கையின் தொடர் முயற்சிகள், நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பதில் இலங்கை கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை காண்பிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் மனித மேம்பாட்டில் (அபிவிருத்தி) நிலவும் முன்னேற்றம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை வெளிக்கொணரும் வகையில் 2023 / 2024ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மனித மேம்பாட்டு சுட்டெண்
மனித மேம்பாட்டை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் பிரதான கூறுகளில் 2022ஆம் ஆண்டில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கணிப்பிடப்பட்டுள்ள மனித மேம்பாட்டு சுட்டெண் பிரகாரமே இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இச்சுட்டெண்ணானது பொருளாதார வளர்ச்சிக்கு அப்பால் மக்களுக்கும், அவர்களது இயலுமைகளுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இது நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கை, போதிய அறிவு மற்றும் சீரான வாழ்க்கைத்தரம் ஆகிய மூன்று பிரதான கூறுகளை உள்ளடக்கியுள்ளது.
உயர்வான மனித மேம்பாடு
அதற்கமைய 'மிக உயர்வான மனித மேம்பாடு' எனும் அளவுகோலில் தெற்காசிய பிராந்தியத்தில் அமைந்துள்ள எந்தவொரு நாடும் உள்ளடக்கப்படவில்லை.
இருப்பினும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த நிலையான 'உயர்வான மனித மேம்பாடு' எனும் அளவுகோலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோன்று இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் 'நடுத்தர மனித மேம்பாடு' எனும் அளவுகோலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என்பன 'மிகக் குறைந்த மனித மேம்பாடு' எனும் அளவுகோலிலும் அளவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |