மைத்திரி தரப்பு அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது அதனை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
அதேவேளை, அனைத்துக் கட்சி கூட்டத்தை ஒன்று கூட்டி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருமாறும் சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அந்தக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரச தலைவர், பிரதமர் தலைமையிலான குழுவினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஐ.பி.சி தமிழின் செய்தி பிரிவிற்கு கருத்து வெளியிட்டார்.
