ரணில் தொடர்பில் எடுத்த தீர்மானத்தில் மாற்றமில்லை! மகிந்த தரப்புக்குள் தீவிரமடையும் மோதல்
கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கான கட்சியின் ஆதரவு குறித்து கேள்வியெழுப்பி ஜீ.எல்.பீரிஸ் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ரணிலுக்கே ஆதரவு
அடுத்த வாரம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக சாகர காரியவசம் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் சாகர காரியவசத்திடம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த சாகர காரியவசம் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக எடுத்த தீர்மானத்தில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கருத்து தற்போது பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கே சாதகமாகவே உள்ளது எனவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
