மொட்டு கட்சிக்குள் முரண்பாடு! வெளியாகும் மாற்று கருத்துக்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாற்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இதனை நிராகரித்த மகிந்த ராஜபக்ச, மே தின நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பயணம்
அமெரிக்காவுக்கு விடுமுறைக்காக சென்றிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் கடந்த 5 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு சென்றார்.
இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் உறுப்பினர்களுடன் அவர் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
தேர்தல்கள்
இதன் போது, தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது இணைந்து செயல்படுவதாகவும் இந்த நிலையில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பான கேள்வியெழுப்ப தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்படுமெனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மே தின நிகழ்வு
இதேவேளை, குறித்த கூட்டத்தின் போது மே தின நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டதாக மொட்டு கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மே தின கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் கட்சியின் மே தின நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது எனவும், பாரிய மக்கள் கூட்டத்தை உள்ளடக்ககூடிய வகையிலான மைதானமொன்று தெரிவு செய்யப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் எந்த தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்நோக்குவதற்கு தமது கட்சி ஆயத்தமாக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |