யாழ்ப்பாண கோட்டை பகுதியில் சமூகச் சீரழிவு - எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண கோட்டை பகுதியை இன்றைய தினம் பார்வையிட்ட மாநகர முதல்வர், அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார்.
இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
அநாகரிக செயற்பாடு
“கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் இனங்காணப்பட்டால், அவர்களை கடுமையாக எச்சரித்து காவல்துறையினர் ஊடாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்ப்பாண கோட்டை பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் பாவனை மையமாக மாறிவருகிறது. கோட்டை பகுதியை சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்றுமாறு நீதிபதிகள் யாழ். மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
ஆகவே கோட்டை பகுதியை சுற்றியுள்ள பற்றைக்காடுகளை உடனடியாக அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
யாழ்ப்பாணக் கோட்டை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் தொல்லியல் திணைக்களத்தினருடன் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளோம். அவர்களும் இதற்கு சம்மதத்தினை தெரிவித்துள்ளனர்” என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)