தமிழர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய காவல்துறை அதிகாரியின் மகன்
திருகோணமலை -கிண்ணியா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (02) இடம்பெற்றுள்ளது.
காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு குறித்த விடயம் தொடர்பான இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சார்ஜனின் மகன்
இதற்கமைவாக குறித்த இளைஞரை பைசல்நகர் பிரதான வீதியில் வைத்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து 05 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- மாஞ்சோலை வீதியில் வசித்துவரும் ஹதரஸ்கொடுவ காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் சார்ஜனின் 24 வயதுடைய மகன் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபர் ஏற்கனவே ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யும்போது குறித்த இடத்தில் இருந்து தப்பி ஓடியவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |