தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை
தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு (Yoon Suk Yeol) எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (14.12.2024) காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன.
எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, நாடாளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக முதலாவது குற்றப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
நேற்று, இரண்டாவது முறையாக ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்தன.
அங்கு தென்கொரிய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் தமது வாக்குகளை பயன்படுத்தியதோடு 204 உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
பிரதமர் பதில் ஜனாதிபதி
பதவி நீக்கத்திற்கு எதிராக 85 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
அதன்படி, தென்கொரிய அதிபர் யுன் சுக் யோலுக்கு எதிரான பதவி நீக்கம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவதால், பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |