அயோத்தி ராமரை தரிசிக்க குவியும் தென்கொரிய மக்கள்
பிரதமர் நரேந்திர மோடியினால் திரை நீக்கம் செய்ப்பட்ட அயோத்தி ராமரை தரிசிக்க தென்கொரிய மக்கள் படையெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியை, தங்களுடைய தாய்வழி ஊராக தென்கொரிய மக்கள் பார்ப்பதே அவர்கள் பெருமளவில் வருவதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவிற்கு சென்ற அயோத்தி இளவரசி
தென்கொரியாவில் உள்ள சில வரலாற்று ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, 2,000 ஆண்டுகளுக்கு முன், அயோத்தியைச் சேர்ந்த, 16 வயது இளவரசி சுரிரத்னா, படகு வாயிலாக கடலில் பயணம் மேற்கொண்டு, 4,500 கி.மீ., தொலைவில் உள்ள கொரியாவுக்கு சென்று அங்கு, கொரிய அரசர் கிம் சுரோவை திருமணம் செய்தார்.
ராணியான சுரிரத்னாவுக்கு, ராணி ஹியோ ஹேவான்காக் என்று பெயரிடப்பட்டது. இவர், 157 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும், 12 குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி ஹேவான்காக்குக்கு நினைவிடம் மற்றும் கோவில்
இந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கரக் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில், 60 லட்சம் பேர், தற்போது தென்கொரியாவில் உள்ளனர். அங்கு, ராணி ஹேவான்காக்குக்கு நினைவிடம் மற்றும் கோவில் உள்ளது. இதைத் தவிர, அயோத்தியில், சரயு நதிக்கரையில், சுரிரத்னாவின் நினைவாக பிரமாண்ட பூங்கா உள்ளது.
கடந்த, 2015ல் பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜேயின் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, அயோத்தியில் உள்ள சுரிரத்னாவின் நினைவிடத்தை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் தொடங்கின.
தாய் வழி ஊரான அயோத்தி
கடந்த, 2018ல் இதை, தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்க்சோக், திறந்து வைத்தார். ராணி ஹேவான்காக் நினைவாக, மத்திய அரசு சார்பில், 2019ல் தபால் தலையும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கரக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும், அயோத்திக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்களுடைய தாய் வழி ஊரான அயோத்தியில், ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா நடந்ததை, நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, ராமர் கோவிலை நேரில் பார்ப்பதற்காக, குழுக்களாக வரத் தொடங்கி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |