சிறிலங்காவில் விசேட பிரமுகர்களின் பாதுகாப்பில் மாற்றங்களுக்கு அறிகுறி..!
சிறிலங்காவின் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக 5,400 சிறப்பு காவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வடக்கில் யுத்ததின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தெற்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குடிசார் கடமைகளுக்கு காவல்துறையினரின் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மதத் தலைவர்கள், மதஸ்தலங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடுகள் உள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆயுதங்கள் பறிமுதல்
இதற்கு பதிலளித்த சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையை பரிசீலனை செய்த பின்னர் அத்தகைய நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை நீக்க அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன் பிறகு சிறப்பு காவலர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது சேவைத் தேவையின் அடிப்படையில் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் போதைப் பொருள் கடத்தல் காரர்களிடமிருந்து
ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள்
அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
