காவல்துறைக்கு கிடைத்த நவீன கருவி : சிக்கப்போகும் வாகன சாரதிகள்
போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்பீட் கன்“ (Speed Gun) சாதனங்கள் இலங்கை காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீற்றர் தொலைவில் வரும் வாகனத்தைப் பிடிக்கும் திறன் கொண்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளியை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும் எனவும் இதன் மூலம் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீதி விபத்துக்களை குறைத்தல்
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணவல, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "2020 முதல் 2024 வரை 11,617 வீதி விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் 12,322 பேர் இறந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி வரை 341 பேர் இறந்துள்ளனர். பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக இருப்பது அதிக வேகம்.
இந்த வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவே இந்த கருவி கொண்டுவரப்பட்டது. இலங்கை முழுவதும் இது பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 30 கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு கருவியின் விலை 33 இலட்சம் ரூபா.
தற்போது 30 பிரிவுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 15 கருவிகளை கொண்டுவர ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 45 பிரிவுகளுக்கும் வழங்க முடியும்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
