இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள சீனி உற்பத்தி
2022ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் (2022) இலங்கையில் சீனி உற்பத்தி 2.1 வீதத்தால் குறைந்துள்ளது.
2021ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த சீனி உற்பத்தி 80555 மெட்ரிக் தொன்களாகும். ஆனால் 2022ஆம் ஆண்டில் இலங்கையில் சீனி உற்பத்தி 78,857 மெட்ரிக் தொன்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
கரும்புச் செய்கைக்கான உரங்களின் பற்றாக்குறை
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் சீனி உற்பத்தியானது தொடர்ச்சியாக மேல்நோக்கிச் செல்வதைக் காட்டினாலும், கரும்புச் செய்கைக்கான உரங்களின் பற்றாக்குறையினால் சீனி தொழிற்துறை எதிர்கொண்ட தடைகள் காரணமாக 2022 ஆம் ஆண்டில் சீனி உற்பத்தி குறைந்துள்ளது.
நாட்டின் மொத்த சீனித் தேவையில்
கடந்த வருடத்தில் செவனகல மற்றும் பெலவத்த சீனி தொழிற்சாலைகளின் உற்பத்தி முறையே 29.0 வீதத்தினாலும் 20.6 வீதத்தினாலும் குறைந்துள்ளது. எனினும், கல்ஓயா மற்றும் அதமலே தொழிற்சாலைகளில் சீனி உற்பத்தி முறையே 27.4 வீதத்தினாலும் 36.2 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சீனித் தேவையில் சுமார் 15 வீதம் உள்ளூரிலேயே பூர்த்தி செய்யப்படுவதாகவும், எஞ்சிய தேவைகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.