இலங்கை மக்கள் எதிர்கொள்ளவுள்ள பேராபத்து - எச்சரிக்கை விடுத்த பேராசிரியர்
இலங்கை காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் தொடர்பான பேராசிரியர் திருமதி மெத்திகா விதானகே குற்றம் சாட்டியுள்ளார்.
பருவநிலை மாற்றம் வரப்போகிறது என்று தெரிந்திருந்தும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத தேசமாக நாம் இருப்பதாகவும், இதைப் பற்றிய அரசியல்வாதிகளின் அலட்சியமே பிரச்சனையின் தீவிரத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் எதிர்காலத்தில் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கையில் முறையாக விசாரணைகள் நடத்தப்படுவதில்லை எனத் தெரிவித்த அவர் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டம் எதுவும் நாட்டில் இல்லை என்றும், அதற்கு அரசியலும் பொறுப்பு ஏற்கத் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையின் நீரினை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
விண்ணில் இருந்து விழும் தண்ணீரை

விண்ணில் இருந்து விழும் தண்ணீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் குடிநீர் பிரச்சினை நிச்சயம் ஏற்படும் என்றும் கூறினார்.
குறிப்பாக வறண்ட பிரதேசத்தில் தண்ணீர் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்த திருமதி விதானகே, சில பகுதிகளில் நீரின் கடினத்தன்மையும் உப்புத்தன்மையும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். இப்பிரச்சினைகளை உரிய முறையில் கையாளாவிடின் எதிர்காலத்தில் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.