சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரிவோர் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்க எரிசக்தி அமைச்சர் இணங்கியுள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
சட்டரீதியான வங்கி முறை மூலம் பணத்தை கொண்டுவரும் திட்டம்
அத்துடன் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் பணத்தை சட்டரீதியான வங்கி முறையின் மூலம் நாட்டுக்கு கொண்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த இரண்டு யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சட்ட ரீதியாக இலங்கைக்கு பணத்தை அனுப்புவோருக்கு அவர்கள் அனுப்பிய பணத்தின் பெறுமதிக்கு அமைய சுங்க வரியற்ற கொடுப்பனவை அறிமுகம் செய்தல் மற்றும் அனுப்பிய பணத்திற்கு அமைய 50 வீதமான பெறுமதியில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரத்தை வழங்குதல் ஆகிய யோசனைகளை அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்துள்ளார்.