முடங்கும் நிலையில் விமான சேவை!! சிக்கலில் மாட்டி தவிக்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
முடங்கும் நிலையில் விமான சேவை
இலங்கையில் விமான எரிபொருள் விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கையிருப்புகளை அவசரமாக நிரப்பாவிட்டால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கணிசமான அளவு குறையும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் விமான எரிபொருளைக் கோரியுள்ளது.
இருப்பினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் வரும் காலங்களில் விமான சேவைகள் முடங்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிக்கலில் மாட்டி தவிக்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
இதேவேளை, குத்தகை அடிப்படையில் சிறிலங்கன் விமான சேவை பெற்றுக்கொண்டுள்ள 25 விமானங்களுக்கான கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாது அந்த நிறுவனம் நெருக்கடியை நிலைமையை எதிர்நோக்கி வருகிறது.
இலங்கை வெளிநாடுகளுடன் கொண்டுள்ள பல்வேறு கடன் உடன்படிக்கைகளுக்கு அமைய செலுத்த வேண்டிய கடன் மற்றும் தவணைகளை செலுத்துவதை இலங்கை மத்திய வங்கி தற்காலிகமாக நிறுத்தியுள்ளதன் காரணமாகவே சிறிலங்கன் விமான சேவைக்கு இந்த நிலைமை உருவாகியுள்ளது.
குத்தகை நிறுவனங்களுக்கு முழுமையான உரிமை கிடைக்கும் வகையிலான நிபந்தனையின் கீழ் 25 விமானங்கள் குத்தகைக்கு பெறப்படடுள்ளன.
உலக புகழ்பெற்ற விமான குத்தகை நிறுவனங்களான எயார் கெப் லீசிங் நிறுவனம், எயர் லீசிங் கோப்பரேஷன் மற்றும் எவலோன் லீசிங் நிறுவனம் உட்பட பல நாடுகளில் உள்ள குத்தகை நிறுவனங்கள் ஊடாக இந்த 25 விமானங்களை சிறிலங்கன் விமான சேவை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணை முறையாக செலுத்தவில்லை என்றால், விமானங்கள் இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் நீதிமன்ற தடையுத்தரவின் கீழ், அவற்றினை குத்தகை நிறுவனங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
