இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான 2வது சுற்று அரசியல் ஆலோசனை சந்திப்பு (படங்கள்)
இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான 2வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 19 ஜூன் 2023 அன்று திபிலிசியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலும், ஜோர்ஜிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் கிவ்டிசியாஷ்விலி தலைமையிலும் இடம்பெற்றது.
இதன் போது, சுற்றுலா, கல்வி, கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பன்முகத் தன்மை என்பது பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்
மேலும், இலங்கையில் உள்ள விடுதிகளில் ஜோர்ஜியர்களுக்கான பயிற்சி, ஜோர்ஜியாவில் உள்ள இலங்கையர்களுக்கு சாத்தியமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் ஜோர்ஜியாவில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான கல்வி, குறிப்பாக மருத்துவக் கல்வித் துறையில் வாய்ப்பை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையில் ஒரு இராஜதந்திரப் பணிமனையைத் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஜோர்ஜியாவுக்கு அழைப்பு விடுதுள்ளார்.




