இலங்கை மீதான தலையீடு - வெளிப்படையாக அறிவித்தது இந்தியா
பொருளாதார ரீதியாக மாத்திரம் உதவி
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் மாத்திரமே இந்தியாவின் கவனம் உள்ளது. ஏனைய விடயங்களில் இந்தியா தலையிடவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறிய அவர், அந்தக் காரணிகளைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. எனவே சமூக ஊடகங்களில் வரும் அனைத்திற்கும் தம்மால் பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,
“இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்ற வகையில், இந்த நேரத்தில் கொழும்பிற்கு பொருளாதார ரீதியாக உதவக்கூடிய வழிகளில் புது டெல்லி கவனத்தை செலுத்துகிறது.
அண்டை வீட்டாராக இருப்பதால் ஆதரவு
இலங்கை மக்கள் எமது அண்டை வீட்டாராக இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தியாவின் அர்ப்பணிப்பாகும். இலங்கையர்கள் நட்பான மனிதர்கள்.
இந்த நட்பின் உணர்திறன் காரணமாகவே அவர்கள் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். தற்போது ஏதிலிகள் நெருக்கடியும் இல்லை” என்றார்.
