கறுப்பாடுகளை கண்டுபிடியுங்கள் - இல்லையேல் அனைவரும் இராஜினாமா செய்யுங்கள்!
சிறிலங்கா நாடாளுமன்றில் ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரணிலுக்கு வாக்களித்ததாக கூறப்படும் கறுப்பாடுகளை உடனடியாக கண்டுபிடியுங்கள் என தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடு கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கண்டு பிடிக்க முடியாவிட்டால் நீங்கள் 10 பேரும் இராஜினாமா செய்யுங்கள் எனவும் காரைதீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கல்முனையைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அ.அரசரெத்தினம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா நாடாளுமன்றில் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தெரிவு தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக டலசுக்கு வாக்களிப்பது என்று முடிவு எடுத்ததாக கூறுகிறீர்கள்.
இந்திய அரசாங்கம் கூறி ரணிலுக்கு வாக்களித்தது யார்?
ஆனால் தேர்தலுக்கு பின்னர் ஒருசிலர் ரணிலுக்கு வாக்களித்ததாக தகவல்கள் வந்திருக்கின்றன. ஆகவே உடனடியாக அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனெனில் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் ரகசியமாக எந்தவிதமான தீர்மானமும் எடுக்க முடியாமல் போய்விடும். இந்திய அரசாங்கம் சொல்லி ரணிலுக்கு வாக்களித்தது என்று யாராவது சொன்னால் நீங்கள் டலசுடன் செய்த ஒப்பந்தம் பிரயோசனமில்லை.
அதுமட்டுமல்ல மற்றும் ஒரு கேள்வி, கட்சி அனைத்தும் சேர்ந்து டலசுக்குக்கு வாக்களிக்குமாறு நீங்கள் தீர்மானம் எடுத்ததாக கூறினீர்கள்.
இது கட்சியின் முடிவா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவா? ஏனென்றால் 75 வருடங்களாக ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட தமிழரசு கட்சி இப்படியான ஒரு தவறான முடிவை எடுத்திருக்கின்றது.
தலைவருக்கு தெரியாமல் முடிவு எடுக்கப்பட்டதா?
அது கட்சியை அவமானத்திற்கு உட்படுத்தியிருக்கிறது என்று தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அறிக்கை வெளியிட்டார்.
அப்படியானால் தலைவருக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சுமந்திரன்,
“அதிபர் தெரிவு தொடர்பாக தமிழரசுக் கட்சி மட்டத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலும் பல்வேறு கூட்டங்களை நடத்தினோம்.
டலசிற்கு வாக்களிப்பதே ஏக மனதான தீர்மானம்
தமிழரசு கட்சி கூட்டங்களுக்கு எல்லாம் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்புக் கொடுத்தோம். ஆனால் எரிபொருள் பிரச்சனை காரணமாக மற்றும் சூம் இணைப்பில் இணைந்து கொள்ள முடியாமை காரணமாகவும் அவரது பங்குபற்றுதல் இல்லாமல் இருந்தது.
ஆனால் அனைத்து தீர்மானங்களும் அவருக்கு கூறப்பட்டு வந்தது. அடுத்தது எமது நாடாளுமன்ற உறுப்பினர் 10 பேரில் ஆறு பேர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மீதி நான்கு பேர் பங்காளி கட்சி உறுப்பினர்கள்.
அனைவரும் ஏகமனதாக இணைந்து டலசிற்கு வாக்களிப்பதாக முடிவு எடுத்தோம். அதன்படியே செயல்பட்டோம். யாராவது மாறி வாக்களித்து இருக்கிறார்கள் என்று நான் கருதவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், த. கலையரசன், தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.