நிவாரண நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் தொகைகள்
பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது.

எனவே, பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும்.
இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும்.
அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும்.
நிவாரணக் கடன்
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர்.

பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர்.
எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்திற்குத் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம்.
மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |