கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து நழுவும் சிறிலங்கா
கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா ஒத்திவைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு கடன்வழங்கியவர்கள் முன்வைத்துள்ள கேள்விகள் சந்தேகங்களிற்கு மத்திய வங்கியும் திறைசேரி அதிகாரிகளும் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக வியாழக்கிழமை இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் செய்தி தெரிவித்துள்ளது.
மேலும், சிறிலங்கா தனக்கு பெருமளவு கடன்களை வழங்கிய இந்தியா சீனா போன்ற நாடுகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களை பெறவேண்டிய நிலையில் உள்ளது எனவும் இதன் பின்னரே சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
டிசம்பரில் அனுமதி
சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்டொலர் நிதி உதவியை பெறுவதற்கான இணக்கப்பாட்டினை எட்டிய பின்னர் கடன்
மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை செப்டம்பரில் ஆரம்பித்தது.
இலங்கை கடந்த தசாப்தகாலத்தில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதை நோக்கிய நடவடிக்கையாக இது காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,நான்கு வருட திட்டத்திற்கான சர்வதேச நாணயநிதியத்தின் அனுமதியை டிசம்பரில் பெறுவதற்கான காலக்கெடுவுடன் இலங்கை செயற்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கரிசனை வெளியீடு
இலங்கைக்கு கடன்வழங்கிய பலர் பல்வேறு கரிசனைகளை வெளியிட்டுள்ளனர் அதற்கான தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர் ஆகவே இதற்கான தெளிவுபடுத்தல்கள் முதலில் இடம்பெறும் அதன் பின்னர் புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைகளிற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளிற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை. நாங்கள் நிதி உத்தரவாதங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றோம்,கடன்வழங்கிய எவரும் தாங்கள் சிறிலங்காவிற்கு ஆதரவளிக்கமாட்டோம் என தெரிவிக்கவில்லை.
எங்களிற்கு இலக்கொன்று உள்ளது நாங்கள் டிசம்பரிற்குள் அந்த இலக்கை அடைய முயல்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
