சீன நிறுவனத்திற்கு 12 வருடங்களாக பணம் செலுத்தும் சிறிலங்கா அரசாங்கம்!
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை பாராமரிப்பதற்காக 12 ஆண்டுகளாக சீன நிறுவனத்திற்கு செலுத்திய பணத்தில் நாட்டுக்கு தேவையான மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பராமரிக்க இலங்கையின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் இல்லையா? சீன நிறுவனத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அப்பாவி நுகர்வோரே செலுத்த வேண்டும்.
வறிய மக்களை பாதித்த மின் கட்டண உயர்வு
மக்கள் அத்தியவசிய பொருட்களை பயன்படுத்த முடியாமல் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளமை மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய நிலைமையாகியுள்ளது.
64 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினாலும் வறிய மக்களுக்கு அது 200 வீதமாக அதிகரித்துள்ளது. வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக கூறினாலும் அரசாங்கத்தின் சார்பில் அதற்கான யோசனைகளோ, வேலைத்திட்டங்களோ முன்வைக்கப்படும் விதத்தை காண முடியவில்லை.
முதலீட்டாளர்களை பாதிக்கும் மின் கட்டணம்
தற்போது பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் முதலீட்டாளர்களுக்கு எம்மை விட குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கி வருகின்றன.
முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை விநியோகிக்கும் முறைமையை அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவது நின்று விடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

