பிரான்ஸ் நகை கொள்ளையில் வெளிவந்த இலங்கை தொடர்பு
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பதிவாகியிருந்த பிரான்ஸ் லூவர் அருங்காட்சியக கொள்ளை தொடர்பில் தற்போது அந்நாட்டில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
1911-ல் மோனாலிசா ஓவியம் திருடப்பட்ட பிறகு, லூவர் அருங்காட்சியகத்தில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் தற்போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எளிமையான ஆனால் செயல்திறன் வாய்ந்த திட்டத்தை பயன்படுத்தி வெறும் 7 நிமிடங்களில் கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
கொள்ளை சம்பவம்
இந்நிலையில் குறித்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட நகைகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான முக்கிய தொடர்பு வெளியாகியுள்ளது.
இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் காணப்படும் கிரீடங்களில் இலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட இலங்கைக்கே உரித்தான நீல இரத்தினக்கல் பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயம் அந்நாட்டின் கலாசார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிரீடங்கள், சங்கிலிகள்
கிரீடங்கள், சங்கிலிகள், காதணிகள் மற்றும் ப்ரூச்சுகள் உள்ளிட்ட எட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில், நெப்போலியனின் மனைவி பேரரசி மேரி-லூயிஸ், அவரது மைத்துனி ஹாலந்து ராணி ஹார்டென்ஸ், 1830 முதல் 1848 வரை ஆட்சி செய்த பிரான்சின் கடைசி மன்னர் லூயிஸ்-பிலிப்பின் மனைவி ராணி மேரி-அமெலி மற்றும் 1852 முதல் 1870 வரை ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனின் மனைவி பேரரசி யூஜினி ஆகியோரின் பொருட்கள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பேரரசி யூஜினியின் கிரீடம் ஒன்றும் திருடப்பட்டது, ஆனால் திருடர்கள் அதைக் கீழே விட்டுவிட்டதால், அது அருங்காட்சியகத்துக்கு அருகில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
