துமிந்த சில்வாவின் வெற்றிடத்திற்கு புதிய தலைவர்!
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இதற்கு முன்னர் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவராக கடமையாற்றிய ரஜீவ் சூரியாராச்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருந்த, துமிந்த சில்வா, காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, கோட்டாபயவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் கோட்டாபய வழங்கிய இந்த பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துமிந்த சில்வாவுக்கு வழங்கிய பொது மன்னிப்பை தற்காலிகமகாக இடைநிறுத்தியது.
அத்துடன் துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துமிந்த சில்வா, தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
