இலங்கையில் இடம்பெற்ற கொடூர தற்கொலைத் தாக்குதல் - நாட்டிற்கு விரையும் ஸ்கொட்லாண்ட்யார்ட்!
இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் சிறிலங்கா விரையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடாபில் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தென்னிவங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா வரவுள்ள பிரித்தானிய காவல்துறை
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தென்னிலங்கை, புத்தளம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் தொடர் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், சுயாதீன விசாரணை நடத்தும் நோக்கில் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறை சிறிலங்கா வரவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்திய அதிபர், ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினரை அழைத்து சுயாதீன விசாரணை நடத்த தீர்மானித்துள்ளார் என அதிபர் செயலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செயற்படுத்தப்படவுள்ள ரணிலின் திட்டம்
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் மேற்கொள்ள முடியும் என அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.
எனினும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் அதிகாரங்களை கொண்ட, முக்கிய நிறுவனங்களான அதிபர் செயலகம், பாதுகாப்பு அமைச்சு, அல்லது பொது பாதுகாப்பு அமைச்சகம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அதிபர் செயலகத்தின் அதிகாரி ஒருவரட தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.
பேராயரின் குற்றச்சாட்டு
இவ்வாறான நிலையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து பதில் அதிபராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையிலேயே தற்போது அதிபராகவுள்ள ரணில் மீண்டும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

