முக்கிய வழக்கிலிருந்து விடுதலையானார் ரணில்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்தே அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கவுள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்னர்.
ரணில் விடுதலை
அதன் போது இந்த ஆட்சேபனைகளை இன்று புதன்கிழமை சமர்பிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வாறான நிலையிலேயே இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக முன்வைக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
7 நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணை
எனினும் இந்தக் கோரிக்கைக்கு பலதரப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று செவ்வாய்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆட்சேபனையை முன்வைத்து தனது கட்சிக்காரர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதால் அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் அடிப்படையில் அதிபரான அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க மதகுருமார்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
