புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள்!
ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளை, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.
உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் இந்த சந்திப்பின் போது, அவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கி வரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் செய்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.
சட்டமூலம் தொடர்பான பேச்சுக்கள்
அதேபோன்று, கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கி வரும் குடிசார் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய தரப்பினரை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இந்த சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரும், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினராலும், அவர்களை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் அமைப்புக்களாலும் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக தாம் சந்திக்க வேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களைத் திரட்டிவருவதாகவும், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிப்பதாகவும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்பு
அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரையும் உள்வாங்கும் வகையில் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், முதலில் தெற்கிலும், அதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட தரப்பினரை தான் சந்திக்கவுள்ளதாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த வாரம் ஐரோப்பாவுக்குப் பயணமாகவுள்ள யுவி தங்கராஜா, லண்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களைச் சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |