உறவுகளைத் தொலைத்த தாய்மாருக்கு ராஜபக்சக்களின் கட்சியை நம்பியுள்ள ரணிலால் பதிலளிக்க முடியுமா!
தாயின் சாபம் மற்றும் கோபம் பொல்லாதது. உலகளவில் அப்படியான சாபத்திற்கு ஆளானவர்கள் வீழ்ந்து மடிந்ததே சரித்திரம் பாடமாக உணர்த்தியுள்ளது.
தாய்மார்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு, ஏக்கம், தாபம், கோபம் எல்லாவற்றிற்கும் மேலாக சாபம் என்பது மிகவும் வலுவானது.
அவ்வகையில் இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 13 ஆண்டுகளுக்கு மேலான பின்னரும், போர்க் காலத்திலும் அதற்கு பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்லது வட்டுவாகல் போன்ற பகுதியில் இராணுவத்திடம் குடும்பத்தாரால் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் அதற்கு பின் என்ன ஆனார்கள் என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை.
உறவுகள் எங்கே என்ற கேள்விக்கு பதிலளிக்காத சிறிலங்கா அரசாங்கம்
அந்த தாய்மார்கள் கேட்பது ஒரேயொரு கேள்வி அதுவும் நேரடியான கேள்வி மட்டுமே. “அவர்கள் (உயிருடன்) இருக்கிறார்களா இல்லையா?” தொடர்ச்சியாக வந்த எந்த அரசாங்கமும் அதற்கு பதிலளிக்க தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.
ஆனாலும் போரில் தமது வாழ்க்கை, வயது, சொத்து, பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என்று ஏராளமான இழப்புகளை சந்தித்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தமது நம்பிக்கையை மட்டும் இன்னும் இழக்கவில்லை.
அதுவே அவர்கள் உறவுகளை தேடும் நடவடிக்கையில் ஆணிவேராக உள்ளது. மழை, வெயில், பனி, காற்று, பசி, பட்டினி, நெருக்கடி, அச்சுறுத்தல், கொலை அச்சுறுத்தல் என அனைத்தையும் கடந்து அவர்களின் போராட்டம் தொடருகிறது.
சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த எமது பிள்ளைகள் எங்கே?
இதை போராட்டம் என்று சொல்வதைவிட தளராத ஒரு வேள்வி என்றே சொல்ல வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி பெண்கள் குறிப்பாக தாய்மார் முன்னெடுக்கும் தெற்காசியாவின் மிக நீண்ட போராட்டம் இது.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2,000 நாட்களை எட்டியுள்ளது. யுத்தம் நடந்த காலப்பகுதியிலும், இறுதி யுத்தத்தின் போதும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு, கிழக்கில் பல இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டார்கள்.
இந்த 2,000 நாட்கள் தொடர் போராட்டத்தில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரத்தக்களரியுடன் முடிவுக்கு வந்த யுத்தம்
பிள்ளைகளை பறிகொடுத்த சோகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல தசாப்தங்களாக தமது உரிமைக்காக அஹிம்சை ரீதியில் போராடிய இலங்கைத் தமிழர்கள், தம்மை அடக்கியாள முற்பட்ட சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக ஆயும் ஏந்தினர்.
அதன் பின்னர் உள்நாட்டு போராக மாறிய மோதல் 2009இல் இலங்கை அரசாங்கத்தால் இரத்தக்களறியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னரும், தமிழர் தாயகப் பிரதேசத்தில், சிங்களவர்களையும், பௌத்த தேசிய வாதக் கொள்கையையும் கொண்ட அரசாங்கத்தின் அடக்குமுறைகள் பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் அவ்வப்போது போராட்டங்களை மேற்கொண்டு வந்த தமிழ்த் தாய்மார், 2017ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
திருப்புமுனையாக அமைந்த காணாமற்போனோர் பற்றிய அலுவலகம்
“எனது பிள்ளை எங்கோ உயிருடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவரை என் கண் நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும் கோருகின்றேன்” என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான ஒரு சூழலில் பேராட்டம் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சில முன்னெடுப்புகள் செயற்படுத்தப்பட்டன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கு அமைய இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.
காணாமற்போனோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின்போது, காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையைக் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் ஆட்சி மாறியவுடன் காட்சிகளும் மாறின. காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் குறிக்கோள்கள், காணாமற் போனோரைத் தேடுதல் மற்றும் அவர்களைப் பற்றிக் கண்டறிதல், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுப்பதற்குப்பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோரினதும் அவர்களது உறவினர்களதும் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உத்தரவாதங்களை மேற்கொண்டு, நிவாரணங்களை வழங்குவதற்கு உசிதமான நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல் என்பனவாகும்.
அலுவலகத்தின் பெயரிலேயே சர்ச்சை
2018 பெப்ரவரி மாதத்தில், அதாவது தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் ஏழு ஆணையாளர்களின் நியமனத்தோடு அலுவலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் பெயரிலேயே சர்ச்சை காணப்படுவதாக தெரிவித்த போராட்டக்காரர்கள் அலுவலகத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தனர். காரணம் தாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடுகின்ற நிலையில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என்ற பெயரில் அலுவலம் ஒன்று இயங்குவதை அவர்கள் விரும்பவில்லை.
இந்த அலுவலகமும் பல்வேறு தகவல்களை திரட்டி சில செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் ஆக்கபூர்வமாக எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அப்போதைய பிரதமரும் இப்போதைய அதிபருமான ரணில் விக்ரமசிங்க காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
நிதி வேண்டாம் நீதியே வேண்டும்
“292 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் வேறு எவரையும் அரசாங்கம் தடுத்து வைக்கவில்லை” என பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்திற்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி வழங்கிய செவ்வியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த அவர், அவர்கள் தொடர்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேபோன்ற கருத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் எனவும், அவர்கள் இறந்துவிட்டதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளதாக, 2020 ஜனவரி 18ஆம் திகதி அதிபர் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
"இதை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். என்ன நடந்தது என அவர்களின் குடும்பங்களுக்கு தெரியவில்லை என்பதால், அவர்கள் காணாமல் போனதாகக் கூறுகின்றனர்," என அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கருடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காணாமல் போனோர் விவகாரத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்பித்து உரை நிகழ்த்திய போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச கூறியிருந்தார்.
எனினும், காணாமல் போனோர் விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதை தவிர, நிதி தேவையில்லை என்ற விடயத்தை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தாம் தெளிவாக கூறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார் குறிப்பிட்டிருந்தனர்.
தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டும் எனவும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வாழ்வாதார ரீதியிலும் வேறு விதத்திலும் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியம் பேசக்கூடிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
எனினும் எதுவும் இடம்பெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு உறவுகளும் மரணித்துக் கொண்டு போகும் போது “எங்களிடம் உள்ள சாட்சிகளும் அவர்களோடு சேர்ந்து மரணித்துப் போகின்றன” என்பதே அந்த தாய்மாரின் கவலையாக மாறியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து போராடும் தாமும் மரணித்து போனால் சாட்சிகளே இல்லாமல் போய்விடும் அதைத்தான் இந்த இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் விரும்புகிறதா? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த தாய்மாரின் கண்ணீருக்கும், போராட்டத்திற்கும் நல்லதொரு பதில் கிடைக்க வேண்டுமென்பதே மனிதாபிமானமிக்க அனைவரது எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், பிரதமராக இருந்த போதும் முடிந்த முயற்சிகளை எடுத்தேன் ஆனால் அதை தன்னால் செயற்படுத்த முடியவில்லை என்று அப்போது கூறிய ரணில் விக்ரமசிங்க இன்று முடிவெடுக்கும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ஆட்சி பீடத்தில் இருக்கிறார்.
இப்போது அவர் அந்த தாய்மார்களின் ஒற்றை கேள்விக்கு பதிலளிக்கும் நிலையில் இருக்கிறார். ஆனால், ராஜபக்சக்களின் கட்சியை நம்பியிருக்கும் அவரால் அந்த பதிலை அளிக்க முடியுமா என்பதே கேள்வி.
அவர் பதிலளிக்க வேண்டும் என்பதே அதற்கான பதிலாகவுள்ளது. அந்த ஒரேயொரு பதில் அவரை தனித்துவமான மனிதராகவும் ஆக்கும் அல்லது பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் சேர்த்துவிடும்.
அவர் தனித்துவமாக மிளிரப் போகிறாரா அல்லது சிங்கள-பௌத்த பேரினவாத சித்தாங்களில் மூழ்கி மங்கப் போகிறாரா என்பதை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தாயின் சாபம் பொல்லாதது!


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 9 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்